மதுரை: சமவேலைக்கு சம ஊதியம் என திமுக அரசின் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி அரசுக்கு எதிராக போராடிய ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம் செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்களின் அதிருப்தி காரணமாக, சம்பளம் பிடித்தம் என்ற அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்னும் 13 நாட்களில் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் ஆசிரியர்களே பெருமளவு ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்து போராட்டம் நடத்திய ஆசிரியர்களின் 19 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தொடக்க கல்வித்துறை அறிவித்தது, ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏற்கனவே தமிழ்நாட்டின் உண்மை நிலவரத்தை கூறிய ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போதைய சம்பளம் பிடித்தம் உத்தரவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், ஆசிரியர்களின் வாக்குகள் திமுகவுக்கு எதிராக மாறிவிடும் நிலை உருவானது.
இந்த நிலையில், ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் என அறிவிக்கப்பட்டது திரும்ப பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்புல், அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் கிடையாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. போராடிய ஆசிரியர்களின் 19 நாட்களும் விடுமுறை நாட்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும், சம்பளம் படித்தம் செய்ய உத்தரவிட்டு சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்து உள்ளார்.
தேர்தலை கருத்தில் கொண்டு, ஆசிரியர்களின் அதிருப்திக்கு திமுக அரசு பணிந்து விட்டதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்..