பெங்களூரு: ஞானபீட விருதுபெற்ற பன்முக ஆளுமையான கிரிஷ் கர்னாட்டின் உடல், அவரின் சொந்த விருப்பத்தின்படியே எந்தவித மத ஆச்சாரங்களும், சடங்குகளும் இன்றி எரியூட்டப்பட்டது. மேலும், பொதுமக்கள் அஞ்சலிக்காகவும் வைக்கப்படவில்லை.

எழுத்தாளர், பன்மொழி வித்தகர், நடிகர், இயக்குநர், வசனகர்த்தா மற்றும் பல்வேறான விருதுகளைப் பெற்றவர் போன்ற பன்முக சிறப்புகளை உடையவர் கிரிஷ் கர்னாட். இவர் தனது 81 வது வயதில் பெங்களூரில் காலமானார்.

ஆனால், இவரின் உடல், கிரிஷ் கர்னாட் விருப்பப்படியே எந்தவித சடங்கிற்கும் உட்படுத்தப்படாமல், அவரின் இறுதி ஊர்வலத்தில், குடும்ப உறுப்பினர்கள், சில நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட நிலையில், கிழக்கு பெங்களூரு பகுதியில் எரியூட்டப்பட்டது.

மேலும், கர்நாடக அரசின் சார்பில் முழு அரசு மரியாதை அளிக்க முன்வந்ததையும் கிரிஷ் கர்னாட் குடும்பத்தினர் நிராகரித்தனர். இதுதவிர, அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காகவும் வைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவருக்கு மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோர் உள்ளனர். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் இவர் மரணமடைந்தார்.