டெல்லி: பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது. மதிப்பெண், பணி மூப்பு அடிப்படையில்தான் பதவி உயர்வுகள் வழங்க வேண்டும் என  தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.  நீதிமன்ற உத்தரவை 12 வாரங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

தமிழகத்தில் அரசு பணி நியமனங்களுக்கு 69 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஆர்பி போன்ற தேர்வு முகமைகளின் போட்டித் தேர்வின் மூலம் நேரடியாக நியமிக்கப்படும் ஊழியர்கள் உட்பட அனைவருக்கும், இடஒதுக்கீடு முறையிலேயே பதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த முறையிலான பதவி உயர்வானது,  கடந்த 2003ம் ஆண்டு முதல்  செயல்படுத்தப்பட்டு வந்தது. பின்னர்,  பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு இடஒதுக்கீட்டை வழங்குவதற்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சட்ட விதியில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்தது.

பதவி உயர்வில் இடஒதுக்கீடு முறை கையாளப்படுவதை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் தீர்ப்பில், தமிழகஅரசின் இடஒதுக்கீடுமுறையிலான பதவி உயர்வு முறையை சென்னை உயர்நீதிமன்றம் 2015ம் ஆண்டு ரத்து செய்தது.

இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவும் உச்சநீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை  உயர்நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் சீனியாரிட்டியை கணக்கிட்டு அதன் அடிப்படையில் 8 வாரத்தில் பதவி உயர்வு வழங்க கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து தமிழகஅரசு மற்றும் டிஎன்பிஎஸ்சி சார்பில்,  உச்சநீதிமன்ற  தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக்கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்,  தலைமைச் செயலாளர் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்னின் 2021ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற விசாரணையின்போது, உச்சநீதிமன்ற  தீர்ப்பை செயல்படுத்த 4 வார கால கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பதவி உயர்வுக்கான இடஒதுக்கீடு, உள்ஒதுக்கீடு வழங்கிய சட்டப் பிரிவுகளை ரத்து செய்து, போட்டித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை 4 வாரத்தில் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று (அக்டோபர் 1ந்தேதி) நடைபெற்றது. வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

தீர்ப்பில், தபொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் என்ஜினீயர் பதவிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. 1999, செப்டம்பர் 10-ந் தேதி வெளியிட்ட அறிவிக்கையின் அடிப்படையில் நடைபெற்ற தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே பதவி உயர்வை வழங்க வேண்டும் .

உச்சநீதிமன்றத்தின்  தீர்ப்பை தமிழ்நாடு அரசு  12 வாரங்களுக்குள் அமல்படுத்த வேண்டும்.

2016 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் பணியாற்றிய அரசு உயர் அதிகாரிகளான தலைமைச் செயலாளர், டி.என்.பி.எஸ்.சி. செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர்கள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்து குற்றம் இழைத்துள்ளனர். இதற்கான தண்டனையின் அளவு, அடுத்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதி அறிவிக்கப்படும். அன்றைய தேதியில் அனைவரும் ஆஜராக வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்து உள்ளனர்.