சென்னை: ராஜீவ்கொலை வழக்கு கைதிகள் 7பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் இருநது இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, இறுதியாக விவாதங்களுக்கு பதில் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.
அப்போது, ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரின் விடுதலை தொடர்பாக அதிமுக அரசு கடந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின் மீது முடிவெடுக்க கோரி ஆளுநரிடம் ஒப்படைத்தது . ஆனால், ஆளுநர் இன்னமும் முடிவெடுக்காமல் இருக்கிறார். தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் கூட அதன் மீது முடிவெடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்று கூறினார்.
7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரின் நடவடிக்கை குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்த நிலையில், ஒரு வார காலத்திற்குள் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால், காலக்கெடுவும் முடிந்த நிலையில் ஆளுநர் அதுகுறித்து எந்தவித பதிலும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார். இது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.