ஸ்ரீநகர் :
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான, மெகபூபா முப்தியின் வீட்டு காவலை மேலும் மூன்று மாதங்கள் நீடித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த, 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி காஷ்மீருக்கு, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் மற்றும் பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப் பட்டனர். மெகபூபா முப்தி, ஸ்ரீநகரில், லால் சவுக் அருகே, மவுலானா ஆசாத் சாலையில் உள்ள, அரசு பங்களாவில் சிறை வைக்கப்பட்டார். இந்தாண்டு, பிப்ரவரி மாதம் 6ம் தேதி அவர் மீது பொது பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது. இதே சட்டத்தில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள், பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா இருவரும், சமீபத்தில், அடுத்தடுத்து விடுதலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மெகபூபா முப்தியும் விடுதலையாவார் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர், அரசு பங்களாவில் இருந்து, குப்கர் சாலையில் உள்ள அவரது அதிகாரபூர்வ, ‘பேர்வியூ’ பங்களாவுக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே, ”எட்டு மாதங்களாக வீட்டுச் சிறையில் உள்ள, மெகபூபா முப்தியை விடுதலை செய்ய வேண்டும்; வீட்டிற்கு அனுப்பினாலும், காவலில் வைத்திருப்பது சரியல்ல,”என, ஒமர்அப்துல்லா வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், பொது பாதுகாப்பு சட்டத்தில் வீட்டு சிறையில் உள்ள மெகபூபா முப்தியின், காவலை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவருடன் சேர்த்து மேலும் இரண்டு ஜம்மு காஷ்மீர் தலைவர்களின் வீட்டுகாவலும் நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.