டெல்லி:

பெட்ரோல், டீசலுக்கு கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக  உயர்த்தியுள்ளது.

வருவாய் இழப்பை ஈடுசெய்ய, நேற்றிரவு முதல், பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாயாகவும், டீசலுக்கு லிட்டருக்கு 13 ரூபாயாகவும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த வரி மாற்றம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. வரி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMC) ஏற்றுக்கொள்ளும் என்பதால், பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விற்பனை விலையை எந்த விதத்திலும் பாதிக்காது என்று தெரிய தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மத்திய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இந்த வரி உயர்வில் இருந்து கிடைக்கும் வருவாய், உள்கட்டமைப்பு மற்றும் பிற செலவுகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 1 ரூபாய் அதிகரிப்பதால், அரசிற்கு ஆண்டு வருமானத்தில் கூடுதலாக 14 ஆயிரம் 500 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும். நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக எரிபொருளுக்கான தேவை கணிசமாக குறைந்து விட்டதால், கலால் வரி உயர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோயை எதிர்த்துப் போராடுவதற்கான பணிகளுக்கு, பணம் திரட்டுவதற்காக டெல்லி ஆம் ஆத்மி கட்சி அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை அதிகரித்த மறுநாளே, மத்திய அரசு இப்படி வரியை உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.