பிளஸ் 2 ரிசல்ட்டில் ரேங்க் பட்டியல் கிடையாது!! செங்கோட்டையன் அறிவிப்பு

Must read

சென்னை,

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிப்பில் இனி ரேங்க் முறை இருக்காது என்றும், முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களின் பெயர் அறிவிக்கப்படாது என்றும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியார்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் ரேங்க் அறிவிப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களின் பெயர் அறிவிக்கப்படாது. 10ம் வகுப்பு தேர்வு முடிவிலும் இந்த முறை கடைபிடிக்கப்படும். மதிப்பெண் அடிப்படையில் இனி ரேங்க் அறிவிக்கப்படாது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பட்டியல் வெளியாகாது. 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும். 3 ஆண்டுகளில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த பள்ளிகல்வித்துறை முடிவு செய்துள்ளது. மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

தேசிய அளவிலான தேர்வுகளைக்கருத்தில் கொண்டு 11-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பரீசிலனை செய்யப்பட்டு வருகிறது. சிறந்த மதிப்பெண் வாங்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு கல்வி உதவித் தொகை, பரிசுகள் வழங்கப்படும்’’ என்றார்.

‘‘தமிழகத்தில் சிபிஎஸ்இ பாணியில் ரேங்க் கிடையாது. முதலிடம், 2 மற்றும் 3-ம் இடம் என்பது இனி கிடையாது. மாணவர்களிடையே மன வருத்தம் ஏற்படுவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழைய கல்வி உதவி தொகை முறையில் மாற்றம் இல்லை’’ என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

More articles

Latest article