ஸ்ரீநகர்: உள்ளூர் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை, இணையதள வசதி ரத்து, தடுப்புக்காவல்கள் குறித்து கேள்விகள் இல்லை என பல சிக்கல்களுடன் ஐரோப்பிய நாடாளுமன்ற குழுவின் ஜம்முகாஷ்மீர் விஜயம் முடிந்திருக்கிறது.

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை நீக்கி, 2 ஆக பிரித்து ஜம்மு,காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்படும் என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு அறிவித்தது. அதற்கு பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.

இந் நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தை சேர்ந்த 27 எம்பிக்கள் குழுவினர், ஜம்மு, காஷ்மீருக்கு வந்தனர். மாநிலத்தின் தற்போதைய நிலைமையை கண்டறிவது அவர்களின் நோக்கமாகும். அவர்களில் 4 பேர் சொந்த நாடு திரும்பி விட்டனர்.

டெல்லியில் அவர்கள் அனைவரும், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்தனர். பின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரையும் சந்தித்தனர்.

 

அதன்பிறகு, அக்குழுவினர் ஜம்முகாஷ்மீர் நிலைமையை கண்டறிய சென்றனர். இளைஞர்கள் குழுவைச் சேர்ந்த 15 பேர்,பஞ்சாயத்து உறுப்பினர்கள், மகளிர் குழுக்களை சந்தித்தனர். இந்திய ராணுவ அதிகாரிகளுடன் புகழ்பெற்ற தால் ஏரியையும் சுற்றி பார்த்தனர்.

ஐரோப்பிய குழுவினருக்கு, மாநில அரசு அதிகாரிகள் கொண்ட குழு அங்குள்ள சூழ்நிலைகள் குறித்து விளக்கியதாக தெரிகிறது. அதன் பிறகு ஸ்ரீநகரில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த சந்திப்பில் தான் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

டெல்லியைச் சேர்ந்த தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஏற்கனவே எந்த தொலைக்காட்சிகளில், எந்த செய்தியாளர் கேள்வி கேட்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் மட்டுமே கேள்விகளை கேட்க வைக்க அனுமதிக்கப்பட்டனர். பிரபலமான, மூத்த, புகழ் பெற்ற செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பும் இல்லை.

மொத்தம், 4 பேர் மட்டுமே நடந்த நிகழ்வை விளக்கினர். இருவர் பிரான்சை சேர்ந்தவர்கள். மற்ற இருவரில் ஒருவர் பிரிட்டன், போலந்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். 45 நிமிடங்கள் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டது. தகவல் தொடர்பு துண்டிப்பு, பிரிவினைவாதிகளின் கைதுகள் குறித்து எந்த கேள்விகளும் கேட்கப்படவில்லை.

பிரான்சை சேர்ந்த மரியானி பேசுகையில், காஷ்மீரில் என்ன நடக்கிறது, சொல்லப்படுவது அனைத்தும் உண்மையா என்று அறிய வந்தோம். எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று இளைஞர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

உலகம் எங்கும் தீவிரவாதம் இருக்கவே செய்கிறது. ஒரு நாட்டை தீவிரவாதம் எவ்வாறு அழிக்கும் என்பது எங்களுக்கு தெரியும். ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளின் வழியே அறிய முடியும். காஷ்மீரை 2வது ஆப்கானிஸ்தானாக பார்க்க எங்களுக்கு விருப்பமில்லை என்றார்.

பிரிட்டனின் எம்பியான பில் நியூட்டன் டன் கூறுகையில், ஒருங்கிணைக்கப்பட் அருமையான ஏற்பாடு. நிச்சயமாக இது அனைவரின் கண்களை திறக்கும். நிலைமையை முன்னேற்றுவது மற்றும் எவ்வாறு உதவுவது என்பதை அறியவே இங்கு வந்தோம் என்றார்.

செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளில் ஒரு முக்கியமான விஷயம் பொதிந்து இருக்கிறது. கேள்விக்கணைகளை தொடுத்த எந்த செய்தியாளரும், காஷ்மீரில் ஏன் இந்திய எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்களை அனுமதிக்க மறுக்கப் படுகிறது என்று கேட்கவில்லை.

அதற்கு ஆதரவாக அந்த குழுவில் இடம்பெற்ற நிகோலஸ் வெஸ்ட் என்பவர் கருத்து கூறியிருக்கிறார். ஐரோப்பிய குழுவினருக்கு அனுமதி அளித்திருக்கும் போது, இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்களையும் அனுமதித்திருக்க வேண்டும். ஆனால் அது இல்லை, எனவே ஏதோவொரு சமநிலையற்ற நிலைமை காணப்படுகிறது என்றார்.