சென்னை: வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டியது இல்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறி உள்ளார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது இதை கூறினார். தொடர்ந்து அவர் கூறியதாவது: தமிழகத்தின் எந்த மாவட்டங்களில் இருந்து சென்னை வந்தாலும் அவர்களுக்கு இனி தனிமைப்படுத்துதல் கிடையாது. கொரோனா பரிசோதனையும் இல்லை.
வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விடுதிகளில் தனிமைப்படுத்துதல் இனிமேல் கிடையாது. வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர். 14 நாட்கள் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கொரோனாவை எதிர்த்து 3 மாதங்களாவது போராடவேண்டிய நிலை இருக்கிறது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், தொற்று குறைந்து விட்டது என்று எண்ணாமல் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.
அனாவசிய பயணம், வெளியே சுற்றுதல் போன்றவற்றை 3 மாதங்கள் தவிர்க்க வேண்டும். ஜூலை வரை சென்னையில் உள்ள 21% மக்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. மெரினா கடற்கரை திறப்பது குறித்து உயர்மட்ட குழு ஆய்வு செய்து வருகிறது, விரைவில் அது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.