சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர  தினேஷ் குண்டுராவ் கூறினார்.

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுளாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில்,  தற்போதைய தேர்தலில் பாதியளவுக்கு கூட ஒதுக்க மறுத்து வருகிறது. இதற்கு காரணமாக, பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் கொடுத்த ரிப்போர்ட் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்குவங்கிகள் இல்லை என்று விமர்சிக்கும் திமுக தலைமை, கொடுக்கும் தொகுதிகளை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது. இதனால், கூட்டணியில் சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்து,  தமிழக காங்கிரஸ் கட்சியின் கருத்து கேட்பு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை நடைபெற்றது. இந்த  ஆலோசனை கூட்டத்தில், தொகுதி பங்கீடு , வேட்பாளர் தேர்வு, சாதகமான தொகுதிகள் குறித்து நிர்வாகிகளுடன் காங்கிரஸ் ஆலோசனைகுறித்து நிர்வாகிகளின் கருத்து  கேட்கப்பட்டது.

அப்போது, திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு கவுரவமான  எண்ணிக்கையில் தொகுதி கிடைக்காவிட்டால், தனித்துபோட்டியிடலாம் என்று சிலர் வலியுறுத்திய தாகவும், ஒருசிலர் 3-வது அணியில் சேர்ந்து போட்டியிடலாம் எனவும் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக  செய்தியாளர்களை சந்தித்த  காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்,  திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை, திமுகவுடன் விரைவில் தொகுதி பங்கீடு உறுதியாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.