சென்னை:

ச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகமே கேட்கிறது. இந்த விவகாரத்தில் ‘அரசியல் விளையாட்டு வேண்டாம்’ என மத்திய அரசுக்கு  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

உச்சநீதி மன்றம் விதித்த கெடு இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், மத்திய அரசின் மவுனத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

காவிரி வாரியம் வேண்டும் காவிரி வாரியம் அமைத்தே தீர வேண்டும் என்பது தான் மக்கள் நீதி மையத்தின் நிலைப்பாடு. உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகமே கேட்கிறது.

ஆனால் இந்த விவகாரத்தில், ஸ்கீம் திட்டத்திற்கு விளக்கம் கேட்பது, தாமதத்திற்கான வழி என்று மத்திய அரசு மீது குற்றம் சாட்டினார்.

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு சட்டம் 6ஏ யிலேயே ஸ்கீம் என்றால் என்னவென்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது என்று விளக்கிய கமலஹாசன், காவிரி விவகாரத்தில் அரசியல் விளையாட்டு வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இரு மாநிலங்களுக்கும் தண்ணீர் வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை அரசுகள் செய்ய வேண்டும். இதில், அரசியல் விளையாடினால் அது ஓட்டு வேட்டைக்கான வழி.  இந்த விவகாரத்தில், அரசியல் விளையாட்டு விளையாடாதீர்கள் என ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.  மக்களுக்கான தேவை என்ன என்பதை பாருங்கள்.

காவிரி மேலாண்மை அமைப்பது கடினம் அல்ல. மத்திய அரசு நினைத்தால் செய்யலாம் என்றும் கூறினார்.

காவிரி பிரச்சினைக்காக அதிமுக எம்.பி.க்கள் தற்கொலை செய்வோம் என்று பேசியது குறித்து கருத்து தெரிவித்த கமல்,. காவிரி பிரச்னைக்காக தற்கொலை செய்வதாக கூறுவது பித்தலாட்டம். அதேசமயம் ராஜினாமா செய்வதாக சொல்வதை வரவேற்கிறேன் என்றார்.

காவிரி விவகாரத்தில், உச்சநீதி மன்றம் தமிழகத்திற்கு தேவையான  தண்ணீர் அளவை குறைத்த பின்பும் மேலாண்மை வாரியம் அமைக்க கெஞ்சிக் கொண்டிருக்கிறோம் என்று கூறிய கமல், நமது நிலை தாழ்ந்து கொண்டே வருகிறது என்று கூறினார்.

ரஜினியின் டுவிட் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கமல்,  காவிரி மேலாண்மை தொடர்பாக ரஜினி கருத்தை வரவேற்பதாக கூறினார்.

இது சம்பந்தமாக முதல்வரை சந்திப்பீர்களா என்று கேள்விக்கு, எங்கள் கோரிக்கையை  முதல்வர் முன் வைப்பதற்காக, அனுமதி கேட்டிருக்கிறேன் என்றும் கூறினார்.

மேலும் செய்தியாளர்களின் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்து பேசும்போது, ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக ஏப்.1 முதல் தூத்துக்குடி மக்களுடன் சேர்ந்து மக்களோடு மக்களாக இணைந்து போராட உள்ளேன் என்று தெரிவித்தார்.

ஏற்கனவே போபாலில் ஏற்பட்டது போன்ற பேரழிவு தூத்துக்குடியில் ஏற்பட்டு விடக் கூடாது என்றும் எச்சரித்தார்.