லூதியானா:

ஞ்சாபில் தற்போது பள்ளி இறுதித்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 10வது வகுப்பு தேர்வை தாயும், மகனும் சேர்ந்து எழுதினர். இது பரபரப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்பதற்கிணங்க, பஞ்சாப் மாநிலத்தில்,  தனது மகனுடன் சேர்ந்து தாயும் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி உள்ளார் பெண் ஒருவர்.

இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. அவரது தன்னம்பிக்கையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் லுதியானா பகுதியைச் சேர்ந்தவர் ரஜினிபாலா. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் 1989 ம் ஆண்டு தனது 9 ம் வகுப்பை முடித்த நிலையில் திருமணம் செய்து வைக்கப்பட்டார்.

தற்போது குடும்பத்தலைவியாக  உள்ள ரஜினி பாலாவுக்கு 44 வயதாகிறது. அவருக்கு 16 வயதில் ஒரு மகனும் உள்ளார்.

இந்நிலையில், 9ம் வகுப்பு வரை  மட்டுமே படித்துள்ள நிலையில், தனது படிப்பை தொடர ரஜினிபாலா விரும்பி னார். இதற்கு அவரது கணவரும், மகனும் உறுதுணையாக இருந்ததால், தொடர்ந்த 10ம் வகுப்பில் படிக்க விரும்பி தனது மகன் படித்து வந்த பள்ளி நிர்வாகத்த நாடினார். அவர்களும் ஓகே சொல்ல, தனது மகன் படித்து வந்த அதே பள்ளியிலேயே சேர்ந்து மகனுடன் 10வது வகுப்பை  படிக்கத் தொடங்கினார்.

மகனுடன் தனியாக டியூசனுக்கும் சென்று தனது படிப்பில் தீவிர கவனம் செலுத்தினார்.  அதைத்தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வையும் எழுதினார்.

29 வருடங்களுக்கு பிறகு இவர் தனது மகனுடன் சென்று 10ம் வகுப்பு தேர்வு எழுதிய புகைப்படமும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவரது முயற்சிக்கு ஆதரவுகள் பெருகி வருகிறது.

ரஜினி பாலா படிக்க அனுமதி அளித்த அவரது கணவருக்கும், படிப்பில் உதவிய அவரது மகனுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.