டில்லி: கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு  விறளக்கம் அளித்துள்ளது. இந்தியா கோதுமையை இறக்குமதி செய்கிறது என்று வெளியாக செய்திகளைத் தொடர்ந்து மத்தியஅரசு மறுத்துள்ளது.

கடந்த மே மாதத்தில், கடுமையான வெப்ப அலையால் கோதுமை உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இதனால், விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், கோதுமை ஏற்றுமதியை இந்தியா தடை செய்தது.  இதனால், இந்தியாவின் கோதுமை உற்பத்தி கிட்டத்தட்ட 3 சதவீதம் குறைந்து 106.84 மில்லியன் டன்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தி 2021-22 பயிர் ஆண்டில் சாதனையாக 315.72 மில்லியன் டன்களைத் தொட்டுள்ளது. வட மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் தானியங்கள் கருகிய வெப்ப அலை காரணமாக கோதுமை உற்பத்தி குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ,தனால், ஆகஸ்ட் மாதத்தில் கோதுமை கையிருப்பு 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாகவும் இதனால், கோதுமையை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதையடுத்து மத்திய அரசின் வேளாண் அமைச்சகம் விளக்கம் தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டள்ளது. அதில், 2021-22 பயிர் ஆண்டுக்கான நான்காவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, அரிசி, மக்காச்சோளம், உளுந்து, பருப்பு வகைகள், ராப்சீட் மற்றும் கடுகு, எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பு ஆகியவற்றின் சாதனை உற்பத்தி மதிப்பிடப்பட்டுள்ளது.   உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு கோதுமை கையிருப்பு உள்ளது. பொது விநியோகத்திற்கு தேவையான கோதுமை கையிருப்பும் உணவு கழகத்திடம் உள்ளது. கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டமில்லை.

இவ்வாறு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.