புதுடில்லி: ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்றும் இடைநீக்க நடவடிக்கைக்கு ஆளான அரசு ஊழியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படாது என்று அறிவித்துள்ளது மத்திய அரசு.

அரசு ஊழியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பாக மத்திய பணியாளர் அமைச்சகம், மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் வெளிவிவகாரத் துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டது.

அந்த ஆலோசனையின் முடிவில், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் அரசு ஊழியர்களுக்கு அல்லது ஊழல் வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அனைத்து துறைகளுக்கும் பாஸ்போர்ட் சட்டம், 1967ன் பிரிவு 6(2)ன் படி, மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, பாஸ்போர்ட் வழங்குவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மீது ஏதேனும் ஊழல் வழக்கு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலோ, ஏதேனும் குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தாலோ, ஊழல் தடுப்பு சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டு அந்த பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்றுள்ளது மத்திய அரசு.