சென்னை:  வீடுகளின் முன்பாக மற்றவர்கள் வாகனங்களை நிறுத்துவதை தடுக்கும் வகையில், பலரது வீடுகளின் முன்பு  No Parking போர்டு அல்லது தடுப்புகள் வைக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் வீடுகளின் முன்பாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ‘நோ-பார்க்கிங்’ போர்டுகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை போன்ற நகர்ப்புறங்களில் மக்கள் நெருக்கம் காரணமாக ஒரே வீட்டில் வசிப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி வாகனங்கள் வைத்திருப்பதால், அவர்களின் வாகனங்களை வீட்டினுள் பார்க்கிங் செய்ய போதுமான வசதிகள் இல்லாததால் வீடுகள் முன்பு  சாலையோரத்தில் நிறுத்தி வருகிறார்கள்.  சிலர், எங்கு காலியான இடம் இருக்கிறதோ அந்த இடத்தில் நிறுத்தி விடுகிறார்கள். பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள், வாடகை காட்டு ஓட்டுநர்கள் சாலையின் ஒரத்திலேயே தங்களது வாகனங்கனை நிறுத்தி வருகின்றனர். இதனால்,  சாலையின் அகலம் சுருங்கி, வாகன போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டு, வாகன நெரிசல் ஏற்பட்டு   வருகிறது. இதனால் அவ்வப்போது தகராறுகளும் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,. நந்தகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்திருந்த மனுவில், ‘சென்னையில் அடையாறு, தி.நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, சாந்தோம், மாம்பலம், அசோக் நகர், கே.கே.நகர், வேளச்சேரி, குரோம்பேட்டை, தாம்பரம், சேலையூர் போன்ற முக்கிய பகுதிகளில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் தங்களின் வீடுகள் முன்பாக எந்தவொரு அனுமதியும் பெறாமல் ‘நோ பார்க்கிங்’ போர்டுகளை வைத்துள்ளனர்.

இதன்மூலம் தங்களது வீடுகளின் முன்பாக உள்ள பொது சாலைகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என தடுத்து அவ்வப்போது தகராறு செய்து வருகின்றனர். சில இடங்களில் வீடுகளின் முன்பாக ‘நோ பார்க்கிங்’ அறிவிப்பு பலகையுடன் பூந்தொட்டிகளை வைத்தும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்கின்றனர்.

சென்னையில் வாகனங்களை நிறுத்த முறையான வாகன நிறுத்துமிடங்கள் இல்லாததால், வாகன ஓட்டிகள் வேறு வழியின்றி தங்களது வாகனங்களை நெரிசல் மிகுந்த பகுதிகளில் நிறுத்திச் செல்ல நேரிடுகிறது.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டபோது, வீட்டின் வாசலில் ‘நோ பார்க்கிங்’அறிவிப்பு பலகை வைக்க யாருக்கும், எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறையும், சென்னை மாநகராட்சியும் பதிலளித்துள்ளது. எனவே, வீடுகளின் முன்பாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ‘நோ பார்க்கிங்’ என்ற அறிவிப்பு பலகைகளையும், பூந்தொட்டிகளையும் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னையில் ‘நோ பார்க்கிங்’ போர்டுகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது,ன வீடுகளின் முன்பு அனுமதியின்றி நோ பார்க்கிங் போர்டு வைத்திருப்பவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன், இதுகுறித்த விதிமுறைகளை பத்திரிகை, ஊடகம் மற்றும் இணையதளம் மூலம் விளம்பர படுத்தவும் காவல்துறைக்கு உத்தரவிட்டு  விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.