ஈரோடு: பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “வாழப்பாடி ராமமூர்த்தியைத் தவிர வேறுயாரும் பதவியை ராஜினாமா செய்ததில்லை” என்று அதிமுக அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு சூடு வைத்துள்ளார்.
தற்போது ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் “ராஜினாமா நாடக” படலம் நடந்து வருகிறது. தங்களது தனிப்பட்ட கோரிக்கையை முதல்வரோ, அமைச்சர்களோ ஏற்காத பட்சத்தில், பொது விசயம் ஏதாவது ஒன்றைக் கூறி அதற்காக ராஜினாமா செய்யப்போவதாக தகவல் பரப்புவது ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களிடையே பரவலாக நடந்துவருகிறது.
சமீபத்தில் அமைச்சர் உதயகுமாரும், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன்” என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் ஈரோடு வந்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏக்களின் ராஜினாமா அறிக்கை பற்றி கேட்கப்ட்டது.
அதற்கு, “எய்ம்ஸ்க்காக எம்.எல்.ஏ.,க்கள் பதவி ராஜினாமா என சொல்வது பெயரளவுக்கு தான். எம்.எல்.ஏ.,க்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார்கள். வாழப்பாடி ராமமூர்த்தியை தவிர வேறு யாரும் பதவியை ராஜினாமா செய்தது இல்லை” என்று பளீரென பதில் அளித்தார் அமைச்சர் செங்கோட்டையன்.
நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக வாழப்பாடி ராமமூர்த்தி பதவி வகித்தார். அப்போது, காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் இழைப்பதாக அறிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். பொதுப் பிரச்சினைக்காக தனது பதவியை ராஜினாமா செய்த ஒரே அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.