காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் வாக்களித்த காரணத்தால் தாலிபான்கள் தனது விரலை வெட்டியபோதும், அந்த நபர் இந்த 2019 தேர்தலிலும் அஞ்சாமல் மீண்டும் வாக்களித்துள்ளார்.

அவரின் பெயரி சபியுல்லா சபி. இவர் ஒரு தொழிலதிபர் என்று கூறப்படுகிறது. கடந்த 2014 தேர்தலில் வாக்களித்துவிட்டு இவர் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இடையில் வழிமறித்த தாலிபான்கள் வாக்களித்த விரலை வெட்டினர்.

இவர் மட்டுமின்றி மேலும் சிலரின் விரல்களையும் வெட்டினர். ஆனால், இந்த தேர்தலில் சபியுல்லா சபி அஞ்சாமல் மீண்டும் மற்றொரு ஆள்காட்டி விரலைப் பயன்படுத்தி வாக்களித்துள்ளார். தனக்குப் போனது ஒரு விரல்தான் என்றாலும், எனது சந்ததிகளின் எதிர்காலம் மற்றும் நாட்டின் ஜனநாயகத்திற்காக வாக்களிப்பதாக தெரிவித்தார்.

இந்த தேர்தலிலும் யாரும் வாக்களிக்கக் கூடாது என்று தாலிபான்கள் மிரட்டல் விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இவர் தனது குடும்பத்தினரையும் அழைத்துச் சென்று வாக்களிக்கச் செய்துள்ளார் மற்றும் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென சமூகவலைதளங்களிலும் கோரிக்கை வைத்துள்ளார்.