சென்னை: தமிழ்நாட்டில் யாருக்கும் M-Pox வைரஸ் எனப்படும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு இல்லை என பொதுசுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
காங்கோ, மத்திய ஆப்பிரிக்கா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் M-Pox (குரங்கு அம்மை) பரவியுள்ளது. M-Pox எனப்படும் குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய். இந்த நோய்த் தொற்று விலங்குகளிடமே அதிக அளவில் பரவும் தன்மை கொண்டது. அந்த நோய் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த நோய் ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில், 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தள்ளது. இந்த நோயானாது, தற்போது கொரோனா தொற்று போல் தீவிரமாக பரவத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் இந்த நோயால் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் நோய் பாதிப்பு காரணமாக இதுவரை 524 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, M-Pox வைரஸ் எனப்படும் குரங்கு அம்மை குறித்து, உலகளாவிய சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஆப்ரிக்காவின் காங்கோவில் பரவிய குரங்கு அம்மை வைரஸின் (MPox) மாறுபட்ட திரிபு 13க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியதையடுத்து, ஐநா சபையின் உலக சுகாதார அமைப்பின் அவசரக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த வைரஸ் சர்வதேச எல்லைகள் மூலம் பல நாடுகளில் பரவக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் குரங்கு அம்மை நோய் பாதிப்பைப் பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளன. இந்த நிலையில், குரங்கு அம்மை தொற்று பாதிப்பு ஆப்ரிக்க கண்டத்திற்கு வெளியே முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டில் ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்தள்ளது.
இந்த நிலையில், குரங்கு அம்மை தொற்று பாதிப்புகளை தடுக்கும் வகையில், இந்திய அரசு அது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் யாருக்கும் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பாக, தமிழக பொதுசுகாதாரத்துறை, மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும், தமிழ்நாட்டிலுள்ள விமான நிலையங்களின் சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.