சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா வலுவானது , அதை யாராலும் புறந்தள்ள முடியாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற லேப் டெக்னீசியன்கள் தின விழாவில் கலந்துகொண்டார். அவருடன், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் இரவீந்தரநாத், பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்க தேசியத்தலைவர் காளிதாசன், வடசென்னை மாவட்ட தலைவர் முனிரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, லேப் டெக்னீஷியன்களின் 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக 60நாட்களில் குழு அமைக்கப்பட்டு, எந்தெந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்பது குறித்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும்.
தமிநாட்டில் அதிமுக அரசு 5 லட்சம் கோடி கடன் மற்றும் 25,436 கொரோனா தொற்று பாதிப்புகளோடு ஆட்சியை விட்டு சென்றது. ஆனால் திமுக அரசு பதவி ஏற்றதும் எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் 2 நாட்களாக இறப்பு ‘0’ என்கிற நிலையில் உள்ளது.
தொடர்ந்து பேசியவர், நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்தால் மட்டுமே ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நினைவாகும். சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்ட மசோதா வலுவாக உள்ளதால்தான் திருப்பி அனுப்பப்படுகிறது. அத்தகைய மசோதாவை யாரும் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது