கோவை: என்னை யாரும் அடிமையாக நடத்த முடியாது, விலைகொடுத்து வாங்கவும் முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. அந்த வகையில் ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந் நிலையில் என்னை யாரும் அடிமையாக நடத்த முடியாது, விலை கொடுத்து வாங்கவும் முடியாது என்று அவர் கூறி உள்ளார். கோவை மாவட்டம், போத்தனூரில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜமாத் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது: அண்ணா கூறியதுபோல் பதவி என்பது, தோளில் போட்டிருக்கின்ற துண்டு. என்னை யாரும் விலை வாங்கவோ, அடிமைப்படுத்தவோ முடியாது. மதம், சாதி என்ற பெயரில் யாரையும் பிரித்து பார்க்கவில்லை.

எந்த மதத்தை சேர்ந்தவர்கள் ஆனாலும் அவர்கள் உரிமையை அதிமுக அரசு பாதுகாக்கும். குடும்பத்தில் ஒருவனாக இருந்து சேவையாற்றி வருகிறேன். அதிமுக ஆட்சியில் இஸ்லாமிய பெண்கள் அதிகளவில் படிக்கின்றனர். ஹஜ் பயண நிதியை மத்திய அரசு ரத்து செய்த போதிலும், தமிழக அரசு ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்குகிறது என்று பேசினார்.