2024ம் ஆண்டு ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கி நடைப்பெற்றது. காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் தொடங்கி யது. இதனை தொடர்ந்து, உரையாற்றிய ஆளுநர் ஆர்.என். ரவி 2 நிமிடங்களில் தனது உரையை நிறைவு செய்தார். தேசிய கீதம் முதலிலும், இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும். உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால் முழுமையாக வாசிக்க விரும்பவில்லை என்று கூறி உரையை 2 நிமிடங்களில் நிறைவு செய்தார். இதனையடுத்து, சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி வாசிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
இந்த நிலையில், ஆளுநர் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில், சபாநாயகர் அவை மரபை கடைபிடிப்பார் என நம்புகிறோம் என்றவர், சட்டசபை தலைவர் நடுநிலையாக செயல்படவேண்டும், ஆனால் அவரே ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார் என்று சபாநாயகர் மீது குற்றம் சாட்டினார்.
தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக கவர்னர் ஏற்கனவே சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாத காரணத்தால் கவர்னர் புறக்கணித்துள்ளார். இது கவர்னருக்கும், அரசுக்கும் இடையே உள்ள பிரச்சனை என்றவர், அதிமுக திட்டங்களை தங்கள் திட்டங்களாக திமுக அரசு கூறி வருகிறது, அதை கவர்னரும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டியவர், கவர்னர் உரையில் எதிர்வரும் ஆண்டில் அரசு என்ன செய்ய போகிறது என்பது குறித்து சுருக்கமாக சொல்வதுதான் மரபு என்றவர், ஆனால், இன்றைய உரை, உப்பு சப்பில்லாமல், ஊசிப்போன உணவு பண்டம் போல உள்ளது என கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அழகாக வடிவமைத்து திட்டமிட்டிருந்தோம், ஆனால் திமுக அரசு அவசர அவசரமாக கிளாம்பாக்க்ம பேருந்து நிலையத்தை திறந்ததால் அடிப்படை வசதிகள் இல்லை இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.