சென்னை:  தமிழ்நாட்டில் எழுந்துள்ள அசாதாரண நிதி நெருக்கடியால் நிகழாண்டில் புதிய சட்டக் கல்லூரிகள் தொடங்க முடியாத நிலை உள்ளதாக மானிய கோரிக்கை விவாதத்தில், தமிழ்நாடு  சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்ததார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய மானிய கோரிக்கை விவாதத்தில், கேள்வி நேரத்தின்போது,  நாகப்பட்டினத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற புதிய கட்டடத்துக்கு அணுகுசாலைகள் அமைப்பது போன்ற உட்கட்டமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பின் ஷா நவாஸ் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சா் எஸ்.ரகுபதி, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு நீதிமன்றக் கட்டடம் திறக்கப்படும் என்றார்.

தொடர்ந்து கும்பகோணம் திமுக சட்டமன்ற உறுப்பினா் க.அன்பழகன் தனது தொகுதியில் சட்டக் கல்லூரி தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தார்.

இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர்  எஸ்.ரகுபதி,  தமிழகத்தில் 14 சட்டக் கல்லூரிகளும், அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீா்மிகு சட்டக் கல்லூரி, திருச்சியில் சட்டப் பள்ளி என மொத்தம் 16 கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 17 ஆயிரத்து 433 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

மாவட்டந்தோறும் சட்டக் கல்லூரிகளை அமைக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம். ஆனால், நிகழாண்டில் அசாதாரண நிதி நெருக்கடி இருப்பதால் எந்தவிதமான புதிய சட்டக் கல்லூரியையும் தொடங்க முடியாத நிலை உள்ளது என்றார்.

இதைத் தொடா்ந்து, உறுப்பினா்கள் க.அன்பழகன், மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) ஆகியோா் எழுப்பிய துணைக் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சா் ரகுபதி, ‘புதிய நீதிமன்றங்களை அமைக்க உயா் நீதிமன்றத்தின் பரிந்துரைகள் பெறப்பட வேண்டும். உயா் நீதிமன்ற பரிந்துரையின் அடிப்படையிலேயே புதிய நீதிமன்றங்களை அரசு அமைக்க முடியும்’

இவ்வாறு அவர் பேசினார்.