சென்னை:

செயற்கையான தடையை ஏற்படுத்தி, ஊழல் முறைகேடுகளுக்குக் கதவைத் திறந்து வைத்து, மக்களை இன்னல் படுத்தும் இ-பாஸ் முறை இனித் தேவையில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கரோனா பேரிடர் காலத்தில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை, காலவரையறையின்றி நீட்டித்துக்கொண்டே போவதால் ஏற்படும் பொருளாதார – சமூகப் பின்னடைவுகளைக் கருதி, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இ-பாஸ் முறையை மட்டும் தொடர்ந்து நீட்டித்து, மக்களை அச்சுறுத்தி, துன்புறுத்தி வருவது முழுவதும் மனிதநேயமற்ற செயல் மட்டுமல்ல; அது அடுக்கடுக்கான எதிர் விளைவுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசே ஊரடங்குத் தளர்வுகளை அறிவித்து, இ-பாஸ் நடைமுறை கட்டாயம் இல்லை.என்று அறிவித்த பிறகு – தமிழக அரசு மட்டும் இந்த முறையை தொடர்ந்து வைத்திருப்பது, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எந்தவிதத்திலும் தீர்வாகாது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகிறோம் என்று கூறும் முதலமைச்சர் இ-பாஸ் நடைமுறையில் ஏன் அதைக் கடைப்பிடிக்கவில்லை? ஊரடங்குத் தளர்வுகள் கொடுத்து, வேலைக்குப் போகலாம், கம்பெனிகள் திறக்கலாம் என்று ஒருபுறம் அறிவித்துள்ள நிலையில் – இன்னொரு புறம் அவர்களை வீட்டுக்குள்ளே முடக்கும் விதத்தில், அவரவர் சொந்தப் பொறுப்பில் கூட, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவித்திருப்பது என்ன வகை கரோனா நிர்வாகம்?ஆகவே மக்களின் உணர்வுகளை மதித்து, மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கான இ-பாஸ் வழங்கும் நடைமுறையை உடனே ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன். இந்த இ-பாஸ் நடைமுறை இனியும் தேவையற்றது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்