மதுரை
நடிகரும் அரசியல் தலைவருமான சரத்குமார் திரப்படத்துறையில் கந்து வட்டி கிடையாது என தெரிவித்துள்ளார்.
நேற்று மதுரையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில செயலாளர்கள் கூட்டமும், மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடந்தது. இதில் நடிகரும் அக்கட்சியின் தலைவருமான சரத்குமார் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர், “ஆர் கே நகர் இடைத்தேர்தல் குறித்து எங்கள் கட்சியின் முடிவு இரு தினங்களில் அறிவிக்கப்படும். கட்டிடத் தொழிலுக்கு மணல் அதிகம் தேவைப்படுவதால் அதை தடையின்றி கிடைக்க அரசு ஆவன செய்ய வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் எந்த தவறும் இல்லை. ஆன்லைனில் மணல் வாங்குவது, இறக்குமதி செய்வது தவிர வேறு வழிகளையும் அரசு செயல்படுத்த வேண்டும்.
திரைப்படத் துறையில் கந்துவட்டி என்பது இல்லவே இல்லை. நான் 33 வருடமாக இதே துறையில் இருக்கிறேன். என் அனுபவப்படி கந்து வட்டி கிடையாது. வங்கிகளில் திரைப்படத் தொழில் அங்கீகரிக்கப்படாததால் சொத்துக்கள் அடமானம் வைத்தால் மட்டுமே கடன் பெற முடியும். கடனைக் கட்டவில்லை என்றால் சொத்துக்களை வங்கி ஜப்தி செய்யும். அதே போல ஃஃபைனான்சியர்களிடம் கடன் வாங்கினால் திருப்பித் தரவேண்டும் இல்லை என்றால் பிரச்னை நேரிடுகிறது. இது கந்துவட்டி கொடுமை கிடையாது.
அசோக் குமாரின் தற்கொலை வருத்தம் தருகிறது. தற்கொலை எதற்கும் ஒரு தீர்வு ஆகாது. அவர் தற்கொலை செய்திருக்க கூடாது. திரைப்படத் துறையில் எந்த பிரச்னை வந்தாலும் சமாளிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அன்புச் செழியன் அசோக்குமாருக்கு கடன் கொடுக்கவில்லை எனச் சொல்வதையும் ஆராய வேண்டும். அவரிடமும் விசாரணை நடத்த வேண்டும்.
ஜெயலலிதா இறந்து ஓராண்டு ஆகிறது. கலைஞரும் நலமின்றி இருக்கிறார். இரண்டு கட்சிகளிலும் சரியான தலைமை இல்லாததால் பா ஜ க தற்போது அதிமுக வின் பின்புலத்தில் உள்ளது. மாலுமி இல்லாத கப்பலை யாரும் செலுத்தலாம் என்பது போல பா ஜ க செய்கிறது. அதனால் தான் கவர்னர் தமிழக அரசின் செயல்பாடுகளில் தலையிடுகிறார்.” என தனது பேட்டியில் கூறினார்.