சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் கூடும் இடங்களில் முக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் குடிமகன்கள் மாஸ்க் அணிந்து வந்தால்தான் மதுபாட்டில் கிடைக்கும் என கடை ஊழியர்கள் கூறி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என பல்வேறு நெறிமுறைகைள தமிழகஅரசு கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. ஆனால், கொரானா தொற்று குறைந்து மக்கள் சகஜ நிலைக்கு வந்ததும், கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டன.
இந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணிந்து வந்தால்தான் மதுபானம்விற்பனை செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தவறாது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிந்து வரும் நுகர்வோர்களுக்கு மட்டுமே மது வகைகள் விநியோகிக்கப்பட வேண்டும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில், மாஸ்க் அணிந்து வருவோருக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.