விருதுநகர்: பட்டாசு ஆலையில் இரவு பணி நடைபெற்றால், அந்த ஆலையின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என விருதுநகர் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. இதை நம்பி பல லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் பட்டாசு ஆலைகளில் பணியாற்றிதான் தங்களது வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். ஆனால், உச்சநீதிமன்றம் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், பசுமை பட்டாசு தயாரிக்க உத்தரவிட்டுள்ளதால், பட்டாசு தொழில் நலிந்து வருகிறது. இதற்கிடையில், பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் வெடிவிபத்துக்களால் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.  கடந்த 10 ஆண்டுகளில் 204 பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட விபத்துகளில், 296 பேர் உயிரிழந்துள்ளனர். 233 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதிக உற்பத்தி, அதிக லாப நோக்கம் இல்லாம பட்டாசு உற்பத்திக்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை உரிமையாளர்கள் பின்பற்றினால்தான் பட்டாசு விபத்துகளைத் தடுக்க முடியும். ஆனால் ஆலை அதிபர்கள் அதை பின்பற்றுவது இல்லை.

இந்த நிலையில், பட்டாசு ஆலைகளில் இரவு நேரத்தில் பணி நடைபெற்றாலோ, பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றாலோ,  குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினாலோ, அந்த பட்டாசு ஆலைகளின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.