சென்னை :
சமூக விலகல், முகக்கவசம் உள்பட கொரோனா பரவல் தொடர்பாக அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காததால், தி.நகர் ரங்கநாதன் தெருவில்உள்ள சுமார் 150 கடைகளை மூட சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆனால் சென்னை உள்படபல பகுதிகளில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதால், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், தொழில்முனைவோர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு, ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், தனிக்கடைகளை திறக்க கட்டுப்பாடுகளுடன அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி திறக்கப்படும் கடைகளில், ஊழியர்கள் முகக்கவசங்கள் அணிய வேண்டும், அடிக்கடி கை கழுவுதல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், பெரும்பாலான கடைகள், அரசின் இந்த உத்தரவுகளை முறையாகக் கடைபிடிக்காமல் வியாபாரத்தை மட்டுமே கவனித்து வருகின்றனர்.
இது தொடர்பாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று தி.நகர் ரங்கநாதன் தெருவில் திறக்கப்பட்டிருந்த கடைகளில் திடீரென ஆய்வு மெற்கொண்டனர். அப்போது, கடைகளில் கிருமி நாசி தெளிக்காமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் திறக்கப்பட்டிருந்த சுமார் 150 கடைகளை மூட சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவிட்டது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.