சென்னை

நேற்று அந்தமானில் புதிய காற்றழுத்த பகுதி உருவாகி உள்ள போதிலும் தமிழகத்தில் கனமழை பெய்யாது என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாகச் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் மிகக் கனமழை பெய்து தற்போது குறைந்துள்ளது.   ஆயினும் கன்யாகுமரி, நெல்லை மாவட்டங்களில் தொடர்ந்து மழை உள்ளது.   வானிலை மையம் இன்று கன்யாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை, சேலம், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை மற்றும் ஏனைய இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

மேலும் வானிலை மையம்,

“நாளை (திங்கட்கிழமை) தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், நாளை மறுதினமும் (செவ்வாய்க்கிழமை), 16-தேதியும் (புதன்கிழமை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரையில், இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். 

தற்போது தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது தாழ்வு மண்டலமாகவும், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற இருக்கிறது. இது ஆந்திரா நோக்கித் தான் செல்கிறது.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், நாளையும் (செவ்வாய்க்கிழமை) மற்றும் 17 (புதன்கிழமை) -தேதியும் மத்திய மேற்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அந்தமானில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாகவும், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று ஆந்திரா நோக்கித்தான் செல்கிறது. இந்த தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இல்லை. 

வட தமிழகத்தில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும். வடதமிழக கடலோர பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும். அதேநேரத்தில் தாழ்வு மண்டலம் தெற்கு நோக்கி நகர்ந்தால், தமிழகத்தில் தரைக்காற்றுக்கு மட்டும் வாய்ப்பு இருக்கிறது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்துக்குப் பிறகு, இது புயலாக மாறுவதற்கு தற்போதைக்கு வாய்ப்பு இல்லை. இதன் காரணமாக ஆந்திராவுக்கு மட்டும் தான் மழை இருக்கும்”

எனத் தெரிவித்துள்ளது.