டில்லி

திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

உலகின் மிகப் பெரிய கோவில்களில் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலும் ஒன்றாகும்.  இங்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.  பக்தர்கள் உண்டியல் மற்றும் நன்கொடை மூலம் லட்சக்கணக்கான ரூபாய்களைக் கோவிலுக்குக் காணிக்கையாக அளிக்கின்றனர்.  இந்த காணிக்கைகளைத் தேவஸ்தானம் வங்கியில் முதலீடு செய்கிறது.

இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தேவஸ்தான பணிகள்,  பக்தர்கள் நலப் பணிகள் என அனைத்தும் நிர்வகிக்கப்படுகின்றன.   இதில் உண்டியல் மூலம் கிடைக்கும் தங்கம் போன்ற விலையுயர்ந்த பொருட்களை வைப்பு நிதியில் வைத்துக் கிடைக்கும் வட்டி வருவாயும் உள்ளடங்கும்.   இவை அனைத்துக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பு உண்டு.

இதைத் தவிர தரிசனம் செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் இலவச லட்டு வழங்கப்படுகிறது.  இந்த லட்டுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது என்றாலும் அதற்கான மூலப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.  அத்துடன் பக்தர்கள் தங்க தேவஸ்தானம் அளிக்கும் அறைகளின் வாடகைக்கும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.  மொத்தம் ஆண்டுக்கு ரூ. 120 கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.

திருப்பதி தேவஸ்தானம் ஒரு தார்மீக நிறுவனம் என்பதால் அதற்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்படுகிறது.   நாடாளுமன்றத்தில் ஆந்திர மாநில பாராளுமன்ற உறுப்பினர் விஜயசாரதி திருப்பதி கோவில் நாட்டின் முக்கிய கோவிலாக உள்ளதால் அதற்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

ஆந்திர நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த கேள்விக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.  அவர் தனது பதிலில், ”ஏராளமான முக்கிய கோவில்கள் நாட்டில் உள்ளன.    அவற்றில் எந்த கோவிலுக்கும் ஜி எஸ் டி விலக்கு அளிக்கப்படவில்லை.   ஆகவே திருப்பதி தேவஸ்தானத்துக்கு மட்டும் ஜிஎஸ்டி வரி விலக்கு வழங்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.