ஈரோடு:

மிழகத்தில் 5வது மற்றும் 8வது வகுப்புக்கு பொதுத்தேர்வு நடப்பாண்டு முதல் நடத்தப்பட உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தறபோது மாணவர்களுக்கு மடிக்கணினி வாங்க நிதி இல்லை என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கைவிரித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்கி வருவதாக அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு அதகளப்படுத்தி வரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தற்போது, தேவையான நிதியில்லை என்று தெரிவித்து உள்ளார். இது கல்வியாளர்கள், ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இக்கு இணையாக தமிழக மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தப்போவதாக கூறி வரும் தமிழக அரசு, அவ்வப்போது புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகள் நீட் கோச்சிங், சிஏ தேர்வு கோச்சிங் என பல தேசிய தேர்வுகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்களை தயார்  செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த கல்வித்துறை, இந்த ஆண்டு அதையும் கிடப்பில் போட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த 2018ம் ஆண்டே அமைச்சர் செங்கோட்டையன், தமிழக அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு கையடக்க கணினி (டேப்லெட் பிசி) வழங்க திட்டமிட்டு உள்ளதாகவும், 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள 3,000 பள்ளிகளில் 2018ம் ஆண்டு இறுதிக்குள் ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வரப்படும் என அறிவித்திருந்தார்.

ஆனால், இதுவரை அதற்கான பணிகள் நடைபெறாத நிலையில், தற்போது, டேப்லட் பிசி வழங்க நிதி இல்லை என்றும், அதன் காரணமாக  8 மற்றும் 9ம் வகுப்பு படித்து வரும் 4 மாணவர்களுக்கு ஒரு டேப்லட் பிசி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

அதுபோல, முதலில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது என்று அறிவித்த அமைச்சர், பின்னர், நடப்பாண்டே பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கே நுழைவுத் தேர்வு வைக்கப்படும்போது, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தினால் என்ன என்றும் வக்காலத்து வாங்கி வருகிறார்….

3வயது குழந்தைகளுக்கு எல்கேஜி, யுகேஜி படிப்புக்கு விதிகளை மீறி தனியார் பள்ளிகள்  இன்டர்வியூ நடத்தப்படுவதாக கூறும் கல்வி அமைச்சர்,  அந்த கல்வி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத கையாலாகாத தனத்தை இவ்வாறு வெளிப்படுத்தி உள்ளதாக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவித்த அமைச்சர், இதுவரை அதுகுறித்து வாயை மூடிக்கொண்டு மவுனியாக இருந்து வருகிறார். இது ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தை கல்வியில் சிறந்த மாநிலமாக மாற்றுவேன் அறைகூவல் விடுத்த  அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சும், அறிவிப்பும்,  கழுதை தேய்ந்து கட்டெறும்பு கதையாக மாறி வருவது, தமிழக கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள்  மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.