டெல்லி: 18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு இலவச தடுப்பூசி கிடையாது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநில அரசுகள் மற்றும் சுகாதாரத்துறையினரின் கோரிக்கையை ஏற்று, 18வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மே 1ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி  போடப்படும் என மத்தியஅரசு நேற்று (19ந்தேதி) அறிவித்தது.

தடுப்பூசி உற்பத்தியாளர்கள் உற்பத்தி யில் 50 சதவீதத்தை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும். மீதியுள்ள 50 சத வீதத்தை மாநில அரசுகளுக்கும் பொதுச் சந்தை விற்பனைக்கும் அளிக்கலாம். உற்பத்தியாளர்கள் மருந்தின் விலையை முன்னதாகவே தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

அத்துடன்  மத்திய அரசு தனது பங்கில் இருந்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங் களுக்கும் கொரோனா பாதிப்பின் அளவை பொறுத்து தடுப்பூசி மருந்துகளை ஒதுக் கீடு செய்யும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. தடுப்பூசி மருந்துகளை பொதுச் சந்தையில் விற்கலாம் என்று உற்பத்தி யாளர்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதன் மூலம் மருந்துக் கடைகளிலும் தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால்  விலை அதிகரிக்கும் என எச்சரிக்கப்படுகிறது. மேலும், மத்தியஅரசு கொரோனா நோயாளிகளை பொறுத்தே தடுப்பூசி வழங்கும் என கூறியுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்தியஅரசின் கூற்றின்படி, கொரோனா பாதிப்பில்லாத  18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் பணம் செலுத்தியே தடுப்பூசி போடப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதையே மறைமுகமாக மோடி அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி , மோடி அரசை காட்டமாக விமர்சித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,

18-45 வயதுடையவர்களுக்கு இலவச தடுப்பூசிகள் இல்லை.

விலை கட்டுப்பாடு இல்லாமல் இடைத்தரகர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். 

பலவீனமானவர்களுக்கும், ஏழை மாநிலங்களுக்கும்  தடுப்பூசி உத்தரவாதம் இல்லை.  

மோடி அரசின் தடுப்பூசி பாகுபாடு- விநியோகம் அல்ல- வியூகம்  

இது மோடி அரசின் பாரபட்சமான நடவடிக்கை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.