சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை குழு அறிக்கை மீது இறுதி முடிவு  எடுக்கக்கூடாது என்று  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.

இந் நிலையில், ஆணையத்துக்கு தடை கோரி சூரப்பா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தை சீர்மிகு உயர்கல்வி நிறுவனமாக அறிவிக்கும் முயற்சியில் அரசுடன் ஏற்பட்ட கருத்து வேற்பாடுகள் காரணமாக சூரப்பா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவரது தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து அரசு தரப்பில் இந்த விவகாரத்தில் ஆளுநர் தான் இறுதி முடிவெடுக்க வேண்டும், எனவே மனுவுக்கு பதிலளிக்க 2 வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வைத்தியநாதன் மார்ச் 15ம் தேதிக்குள் சூரப்பாவின் மனு மீது பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு  உத்தரவு பிறப்பித்தார்.

விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளி வைத்த நீதிபதி, அதற்குள்ளாக விசாரணை ஆணையம் அறிக்கை அளித்தால், எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.