சென்னை: சூரப்பா மீதான ஊழல் குறித்து விசாரிக்கும் விசாரணைக் குழுவுக்கு கால நீட்டிப்பு தேவையில்லை என விசாரணைக் குழு ஆணையர் நீதிபதி கலையரசன் தெரிவித்து உள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா, விதிகளை மீறி பணி நியமனம் செய்ததாக அவர் மீது ஊழல் புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவர் மீதான முறைகேடு புகார்கள் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் சூரப்பா ஓய்வு பெற்றுவிட்டாலும் இதுவரை ஆஜராகாமல் இருந்து வருகிறார். அவர் ஆஜராக உயர்நீதிமன்றம் தடையை நீட்டித்து வருகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த விசாரணை அதிகாரியான நீதிபதி கலையரசன், சூரப்பான மீதான விசாரணை தினந்தோறும் நடைபெற்று வருவதாகவும், அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள், சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் விதெரிவித்துள்ளார்.
மேலும், தனது தரப்பு விளக்கத்தை அளிக்க சூரப்பாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்த நீதிபதி கலையரசன், விரைவில் விசாரணையை முடித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
ஆணையத்தின் காலம் மே மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், அதற்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றவர், விசாரணைக் குழுவுக்கு கால நீட்டிப்பு தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.