சென்னை: டிஎன்பில் போட்டிகள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆதாரமற்றவை எனக்கூறி நிராகரித்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அமைத்த உயர்மட்ட விசாரணைக் கமிட்டி.

டிஎன்பில் போட்டித் தொடரில் பெரியளவிலான முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து அதுதொடர்பாக விசாரணை நடத்த 3 நபர்கள் கொண்ட உயர்மட்டக் கமிட்டியை அமைத்தது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.

தான் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், அத்தகையக் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என்றும், எனவே அந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்றும் கூறி நிராகரித்துள்ளது விசாரணைக் கமிட்டி.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சிவராம கிருஷ்ணன், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி நாஞ்சில் குமரன் மற்றும் மூத்த வழக்கறிஞர் ரகுராமன் ஆகியோர்தான் அந்த 3 நபர் உயர்மட்டக் கமிட்டியில் இடம்பெற்றவர்கள்.

இந்தக் கமிட்டியின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, டிஎன்பில் போட்டிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார் டிஎன்சிஏ தலைவர் ரூபா குருநாத். இந்த அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்பதால், யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.