வேலூர்:
பிரபல தனியார் பல்கலைக்கழகமான விஐடியில் பொறியியல் உயர்படிப்பான எம்.டெக் படிப்பில் சேர இந்த ஆண்டு நுழை தேர்வு கிடையாது என்று அறிவித்து உள்ளது.
கொரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  நடப்பாண்டு எம்.டெக். படிப்பில் சேருவதற்கு நுழைவுத்தேர்வு இல்லாமல் இளநிலை படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும் என வேலூர் விஐடி பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து வி.ஐ.டி. பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

வி.ஐ.டி. வேலூர், சென்னை, ஆந்திரம், போபால் வளாகங்களில் 23 வகையான எம்.டெக். படிப்புகள் அளிக்கப்படுகின்றன. இந்த எம்.டெக்., எம்.சி.ஏ. படிப்புகளுக்கு வழக்கமாக நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வி.ஐ.டி.யில் இந்த ஆண்டு எம்.டெக்., எம்.சி.ஏ. படிப்பில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படாமல் இளநிலை படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதற்கு மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஜூன் 20–ம் தேதி கடைசி நாளாகும்.
ஏற்கெனவே விண்ணப்பம் சமர்ப்பித்த மாணவர்கள் மின்னஞ்சல், செல்லிடப்பேசி எண்களைத் தவிர மற்ற தகவல்களை வரும் ஜூன் 20–ம் தேதி வரை திருத்தம் செய்து கொள்ளலாம்.
கேட் தேர்வு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கேட் தேர்வு எழுதாத மாணவர்கள், அவர்களுடைய இறுதித் தேர்வுக்கு முன் எழுதிய தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெறும். தொடர்ந்து ஆகஸ்ட் 3-–ம் தேதி வகுப்புகள் தொடங்கும்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் வி.ஐ.டி.யில் நுழைவுத் தேர்வின்றி நேரடியாக 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.டெக்., எம்.எஸ்.சி. படிப்புகளில் சேரலாம்.
இப்படிப்புகளில் சேர ஜூலை 15-–ம் தேதி கடைசி நாளாகும். எனினும், பிளஸ் 2 தேர்வு நிறைவு பெறாததாலும், தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததாலும் இந்த கால வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வி.ஐ.டி.யின் பல்வேறு முதுநிலைப் படிப்பு குறித்த தகவல்களை இணையதளத்தில் பெறலாம்.
இணையதள முகவரி: https://viteee.vit.ac.in/
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.