கோவை :
கோவை மாவட்டத்தில் உள்ள செம்புக்கரை, தூமானூர் கிராமங்களில் பெரும்பகுதியில் இப்போதும் மின்சார இணைப்பு இல்லை. இக் கிராமங்களின் ஒரு பகுதிக்கு கடந்த சனிக்கிழமை அன்றுதான் முதன் முதலாக மின்சார வசதி அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் அதிகம் வசிக்கும் கிராமம் செம்புக்கரை. இங்கு மின்சார வசதியே இல்லை. மக்களும் தொடர்ந்து மின்சாரத்துக்காக மன்றாடிப் பார்த்தார்கள்.
ஆனால் மலைப்பகுதி கிராமங்களான செம்புக்கரை மற்றும் தூமானூர் பகுதிகளுக்கு மி்னசார வசதி வழங்க கடந்த 4 வருடங்களுக்கு முன்புதான் மின்சார வாரியம் முயற்சி எடுத்தது. அந்த முயற்சியும் நாளடைவில் கிடப்பில் போடப்பட்டது.
அதன் பிறகு கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஆறுகுட்டியின் நடவடிக்கைகளால், கடந்த ஜனவரி மாதம் இந்த ஒப்பந்தம் மீண்டும் உயிர்பெற்றது.
தமிழக அரசு இலவசமாக வழங்கிவரும் இலவச டி.வி. மிக்சி, பேன், கிரைண்டர் உள்ளிட்டவைகள் இப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தாலும், மின்சார வசதி இல்லாததனால், பல வருடங்களாக இவை காட்சிப் பொருளாகவே அவர்களது வீட்டில் இருக்கின்றன.
இந்த பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம். இதனாலும் மின்சார பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது என்கிறார்கள் அதிகாரிகள்.
200 குடும்பங்கள் வசித்து வரும் இந்த கிராமங்களில், நான்கில் ஒருபகுதி மக்களுக்கு தான் தற்போது மின்சார வசதி செய்து அளிக்கப்பட்டுள்ளது. மீதம் முக்கால் வாசி கிராமத்தினர் இருளில்தான் தவிக்கிறார்கள்.