ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் அருகே 6 மாதமாக குடிநீர் வழங்கப்படாத நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகரம் மேல் சுண்ணாம்புகளை பகுதியில் சுமார் 1500 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 6 மாத காலமாக முறையான குடிநீர் வழங்கவில்லை என்ற கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றம் ஊராட்சி செயலரிடம் புகார்  கூறியும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படும் அப்பகுதி மக்கள்,  சமீபத்தில் பெய்த மழை நீரை பாத்திரங்களில் பிடித்து, சேமித்து வைத்த  குடித்து வருவதாகவும், இதனால் நோய் தொற்று வந்து பலர்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறுகின்றனர்.

இதையடுத்து, அந்த கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றிணைந்து,  காலி குடங்களுடன் திருப்பத்தூர் பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து, சாலை மறியல் செய்த மக்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினார். இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மக்களின் போராட்டம் தீவிரமானதை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியர் ஆனந்தா கிருஷ்ணன் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாவதி உதவியாளர் ராஜா ஆகியோர் அப்பகுதி மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக  கூறினர். இதைத்தொடர்ந்து  பொதுமக்கள் சாலை மறியல் கைவிட்டு சென்றனர்.

பொதுமக்களின் சாலை மறியல் போராட்டம் காரணமா, சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு இதனால் பணிக்கு செல்பவர்கள் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து கூறிய அப்பகுதி மக்கள், வசதி படைத்தவர் குடி தண்ணீரை விலைகொடுத்து வாங்கி விடுகின்றனர் எங்களை போல் ஏழ்மையில் உள்ளவர்கள் எப்படி முடியும் நாங்கள் குடிக்க தண்ணீர் தான் கேட்கின்றோம் நாங்கள் பலமுறை கூறியும் எந்தஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் இன்று சாலை மறியல் செய்கிறோம் என்று கூறினர்.