சென்னை: எப்போதும் ஆட்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் எம்ஜிஆர் ரயில் நிலையம் (சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்) இப்போது ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது.

பேருந்து, ரயில் மற்றும் விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து முடங்கி உள்ளதால் பல மாநிலங்களில் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ரயில் நிலையங்கள் ஆட்களின்றி இருக்கின்றன.

தென் மாநிலங்களில் முக்கிய கேந்திரமாக விளங்கும் சென்னை நகரில் முக்கிய போக்குவரத்து கேந்திரமாக இருப்பது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். இந்த நிலையம் இப்போது எம்ஜிஆர் ரயில் நிலையம் என்று பெயர் மாற்றத்துடன் காணப்படுகிறது.

சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்ல மிக முக்கிய இடமாக இருப்பது இந்த எம்ஜிஆர் ரயில்நிலையம் தான். கொரோனா ஊரடங்கு காரணமாக, 2வது வாரமாக ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் இந்த ரயில் நிலையம் சென்னையின் ஒரு முக்கிய அடையாளமாகும். பயணிகள் நடமாட்டம் இன்றி 12 நடைமேடைகளும் காணப்படுகின்றன. பயணிகள் காத்திருப்பு அறை, பொருட்கள் வைப்பு அறை, ரயில் நிலைய கடைகள் உள்ள பகுதி என எங்கு பார்த்தாலும் காலியாக இருக்கிறது.

இதற்கு முன்பாக ரயில் நிலைய ஊழியர்கள் போராட்டம், ரயில் போக்குவரத்து நிறுத்தம் இருந்த போதிலும் ஆட்கள் நடமாட்டம் நிச்சயமாக காணப்படும். ஆனால், இப்போது எந்த ஆரவாரமும் இன்றி மிக அமைதியாக இந்த ரயில் நிலையம் காணப்படுவது முற்றிலும் ஒரு அனுபவமாக பார்க்கப்படுகிறது.