கொழும்பு: இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் எங்களுக்கு உதவ‌வில்லை என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வேதனை தெரிவித்து உள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பல்வேறு வகையில் உதவி வருகிறது. அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள் தொடர்ந்து வழங்கி வருகிறது. ஏற்கனவே தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டின் போது 11 ஆயிரம் டன் உணவுப்பொருள் வழங்கியது. இதன்படி ஜனவரியில் இருந்து இதுவரை ரூ.7,500 கோடிக்கு அத்தியாவசிய பொருள் உதவியும், ரூ.7,000 கோடிக்கு எரிபொருள் மற்றும் நாணயமாற்று உதவியும், ரூ.7,500 கோடிக்கு ஆசிய யூனியன் கூட்டமைப்பு சார்பில் இந்தியா உதவி வழங்கி இருப்பதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும்,  எரிபொருள் தேவைக்காக ஏற்கனவே வாங்கிய கடனில் ரூ.750 கோடி மட்டுமே மீதி உள்ளது. அதை வைத்து 2 தடவை கப்பல் மூலம் எரிபொருள் வாங்கலாம். மேலும் எரிபொருள் தேவைப்படுவதால், ரூ.1,500 கோடி கடனுதவி வாங்கி இருக்கிறோம். இதைத்தவிர, மேலும் ரூ.3 ஆயிரத்து 750 கடனுதவி கேட்டு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்இலங்கை மின்சாரம் மற்றும் எரிசக்தித்துறை மந்திரி காஞ்சனா விஜேசேகரா கூறியிருந்தார்.

இந்த நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே,  “இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் எங்களுக்கு உதவ முன்வரவில்லை என்று  வேதனை  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில், இலங்கையில் எரிபொருள், நிலக்கரிக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், எந்தவொரு நாடும் இதற்காக பணம் வழங்கவில்லை என வேதனை தெரிவித்தார். இந்தியா மட்டுமே இலங்கைக்கு எரிபொருள், நிலக்கரி ஆகியவற்றை வழங்கி வருவதாக தெரிவித்த ரணில், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார்.

இலங்கையில் மின் விநியோக அமைப்பு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. பதாகைகளை பிடித்து நீங்கள் போராட்டம் நடத்தலாம். ஆனால், தடை ஏற்படுத்தாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தீர்களானால், இந்தியாவிடம் உதவி கேளுங்கள் என என்னிடம் கேட்காதீர்கள். நமக்கு எரிபொருள், நிலக்கரி வாங்க எந்த நாடும் பணம் கொடுக்கவில்லை. இந்தியா மட்டுமே நமக்கு எரிபொருள், நிலக்கரி வாங்க பணம் கொடுக்கிறது. இந்தியாவிடமிருந்து நாம் வாங்கும் கடனின் அளவு அதன் எல்லையை நெருங்கி விட்டது. அதை நீட்டிப்பது குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை செய்துகொண்டே இருக்க முடியாது. நமக்கு ஏன் உதவிகளை செய்ய வேண்டுமென இந்தியாவில் இருந்து சிலர் கேட்கின்றனர். முதலில் அவர்கள் உதவி செய்யும் முன் நமக்கு நாமே உதவி செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றனர். மேலும், இலங்கைக்கு உதவி செய்ய இந்தியாவில் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், எதிர்ப்பை மீறி இலங்கைக்கு இந்தியா உதவி வருவதாகவும் ரணில் விக்கிரமசிங்கே குறிப்பிட்டுள்ளார்.