டில்லி,
மிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதி இடைத்தேர்தலில்  மார்க்சிஸ்டு கம்யூ. போட்டியிடவில்லை என்று தமிழக மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது நடைபெற உள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து கடந்த 21-ந்தேதி மக்கள் நலக்கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
3 தொகுதிகள்தான் என்ற போதிலும் அரசியல் போராட்டத்தின் தொடர்ச்சி என்கிற முறையிலும் அ.தி.மு.க., தி.மு.க.விற்கு உண்மையான மாற்று மக்கள் நலக் கூட்டணி என்கிற முறையிலும் இந்த தேர்தலில் போட்டியிடுவதே சரி என்று மார்க்சிஸ்டு கட்சி கருதியது. அதையே கூட்டத்திலும் வலியுறுத்தியது. ஆயினும் போட்டியிடுவதில்லை என மக்கள் நலக்கூட்டணி ஒரு மனதாக முடிவை மேற்கொண்டது.
இருப்பினும் கட்சி அணிகள் மற்றும் மாற்று அரசியலை விரும்புவோர் மக்கள் நலக்கூட்டணி இத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என கருத்துக்களை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து 26-ந் தேதி கூடிய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு, மக்கள் நலக்கூட்டணியின் முடிவினை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இதுகுறித்து கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி போட்டியிட வலியுறுத்துவது எனவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் மக்கள் நலக்கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்யப்பட்டது. ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 3 தொகுதிகளுக்கான தேர்தலில் போட்டியிடுவது இல்லை என முடிவு செய்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.