டில்லி

டில்லி நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்துக்கும் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு அதிகாரிகளுக்கும் தொடர்பு இல்லை என்னும் வாதத்தை ஏற்று அவர் கைதுக்கு ஏப்ரல் 16 வரை தடை விதித்துள்ளது.

ஏர்செல் – மாக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ,  அமலாக்கத்துறை உள்ளிட்ட  பல அரசு அமைப்புகள் வழக்கு பதிவு செய்தது.  இந்த வழக்குகளில் தம்மை கைது செய்வதை தடை செய்ய வேண்டும் என கார்த்தி சிதம்பரம் டில்லி நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவின் விசாரணையில் கார்த்தியின் வழக்கறிஞர் கபில் சிபல், “ஏர்செல் – மாக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில் கார்த்திக்கு எதிரான குற்றச் சாட்டுகள் கிடையாது.   அத்துடன் வெளிநாட்டு முதலீட்டு அதிகாரிகளுக்கும் கார்த்திக்கும் தொடர்பு இருந்ததாக கூற எந்த ஆதாரமும் இல்லை.  இதுவரை நடந்த அனைத்து விசாரணைகளிலும் கார்த்தி தனது முழு ஒத்துழைப்பை அளித்துள்ளார்.   அவர் நாட்டை விட்டு வெளியேறுவார் எனவோ, ஆதாரத்தை அழித்து விடுவார் எனவோ வாதம் ஏதும் வைக்கவில்லை” என தெரிவித்தார்.

அதை ஒட்டி நீதிமன்றம், “வரும் ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.   மேலும் அவரது முன் ஜாமீன் மனு குறித்து இன்னும் 3 வாரங்களில் சிபிஐ  மற்றும் அமலாக்கத்துறை உறுப்பினர்கள் பதில் அளிக்க வேண்டும்.   நீதிமன்ற அனுமதி இல்லாமல் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லக் கூடாது” என தீர்ப்பளித்துள்ளது.