சென்னை: அதிமுக தரப்பில் சட்டப்பரவை தலைவர் சபாநாயகர் அப்பாவு மீது கொடுக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று விவாதிக்கப்பட உள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான இபிஎஸ் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தை மூத்த உறுப்பினர் செங்கோட்டையன் புறக்கணித்தார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பேரவையில் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமாரும், பேச முயன்றனர். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், பேச அனுமதி மறுத்த சபாநாயகர் அப்பாவு, திங்களன்று பேச அனுமதிப்பதாகக் கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததோடு, சபாநாயகருக்கு எதிராக சட்டப்பேரவை செயலாளரிடம் நம்பிக்கையில்லா தீர்மானம் வழங்கினர். அதன்படி, சட்டப்பேரவையில் இன்று, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
அதனால் அந்த சமயத்தில் சட்டப்பேரவையை, துணை சபாநாயகர் பிச்சாண்டியோ அல்லது மாற்று தலைவர்களோ சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்துவார்கள். அப்போது, சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து, அதன்மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்படும்.
இதற்கிடையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, சபாநாயகர் மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது எந்ந பேச வேண்டும், எப்படி வாக்களிக்க வேண்டும் என்று ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.