புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று என்பது சமூகப் பரவல் நிலையில் இல்லை என்று தெரிவித்துள்ளார் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் டாக்டர்.பல்ராம் பார்கவா.

இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம், நிதி ஆயோக் மற்றும் ஐசிஎம்ஆர் ஆகிய அமைப்புகளின் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.

அப்போது, பேசிய ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா, “சமூகப் பரவல் என்பது குறித்த விவாதம், இந்தியாவில் பெரியளவில் இருந்து வருகிறது. ஆனால், அப்படியென்றால் என்ன என்பது குறித்த ஒரு தெளிவான வரையறையை உலக சுகாதார நிறுவனம் இன்னும் வழங்கியிருக்கவில்லை.

இந்தியா போன்ற பெரிய மக்கள் தொகை உள்ள நாடுகளில், பரவல் விகிதம் குறைவாகவே உள்ளது. சிறிய மாவட்டங்களில் பரவல் விகிதம் 1%க்கும் குறைவாகவும், நகர்ப்புற பகுதிகளில் அதைவிட சற்று அதிகமாகவும், கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அதைவிட சற்று அதிகமாகவும் உள்ளது.

ஆனால், இந்தியாவில் சமூகப் பரவல் இல்லை என்பதை உறுதியாக கூற முடியும். அதேசமயம், பரிசோதனை, கண்டறிதல் மற்றுத் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட நமது தடுப்பு வியூகங்களை நாம் தொடர்ச்சியாகப் பின்பற்ற வேண்டும்” என்றார் அவர்.