டில்லி

னி ராணுவ கேண்டீன்களில் இந்தியப் பொருட்கள் மட்டுமே விற்கப்படும் என்னும் உத்தரவில் எவ்வித மாற்றமும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த 12 ஆம் தேதி அன்று பிரதமர் மோடி மக்களுக்கு ஆற்றிய உரையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.  அதையொட்டி மத்திய உள்துறை அமைச்சகம் இனி ராணுவ கேண்டின்களில் உள்நாட்டுப் பொருட்கள் மட்டுமே விற்கப்படும் எனவும் வெளிநாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும்  அறிவித்தது.

இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி மத்திய காவல்துறை கேண்டின் பொறுப்பாளர் ஆர் எம் மீனா,”மத்திய உள்துறை அமைச்சகம் உள்நாட்டுப் பொருட்கள் குறித்து தெளிவாக விளக்கம் அளிக்கவில்லை. எனவே கேண்டீன்கள் தற்போது விற்பனை செய்யும் பொருட்களை மேலும் கொள்முதல் செய்யலாம்” என உத்தரவு பிறப்பித்தார்.   இது மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கியது.

ஒரு சில ஊடகங்களும் மத்திய உள்துறை அமைச்சகம் கேண்டீனில் இந்தியப் பொருட்கள் மட்டுமே விற்கப்படும் எனப் பிறப்பித்த உத்தரவை மாற்றி திரும்பப் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியிட்டன.    இதையொட்டி நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் கேண்டீன்களில் இந்தியப் பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்பதில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் ஜூன் 1 முதல் ராணுவ கேண்டீன்களில் இந்தியாவில் தயாராகும் பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் எனவும் அந்த பொருட்களைக் காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்திடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.   அதையொட்டி மீனா தனது உத்தரவை திரும்பப்  பெற்றுள்ளார்.