பாரா ஒலிம்பிக் போட்டியில்  தங்கம் வென்றுள்ள தமிழக இளைஞர் மாரியப்பனின் தாயார்   சரோஜா, ” தங்கப்பதக்கம் வென்றுள்ள என் மகனை, அந்த சாதி இந்த சாதி என சிலர் பேசுவது மனதை கஷ்டப்படுத்துகிறது. இப்படி சாதியைக் கூறி மனதை ஊனப்படுத்தி விடாதீர்கள்” என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

படத்தில் இருப்பது மாரியப்பனின் தாயார், அக்கா மற்றும் இரு தம்பிகள்
படத்தில் இருப்பது மாரியப்பனின் தாயார், அக்கா மற்றும் இரு தம்பிகள்

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த பெரிய வடகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் தங்கவேலு. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். மாரியப்பனின் தந்தையார் பெயர் தங்கவேலு. இவர் அங்குள்ள செங்கல் சூளை ஒன்றியால் பணி செய்கிறார்.  இவரது தாயார் சரோஜா, காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். மாரியப்பனுக்கு ஒரு அக்காவும், இரண்டு தம்பிகளும் உள்ளனர். ஏழ்மையான இவர்களது குடும்பம் இன்னமும் வாடகை வீட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சிறுவனாக இருந்தபோது (5 வயது) அவரது வலது காலில் அரசு பஸ் சக்கரம் ஏறியதால் பலத்த காயம் ஏற்பட்டது.  இதன் காரணமாக அவரது கால் ஊனமானது. இதன் காரணமாக அவர் மாற்றுத் திறனாளி என குறிப்பிடப்பட்டார்.
மாரியப்பனுக்கு, படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வம் அதிகம். ஏழ்மையின் காரணமாக அவருக்கு வேண்டியதை வாங்கிக் கொடுக்கவோ, செலவு செய்யவோ அவரது பெற்றோரால் முடியவில்லை. தாயார் சரோஜா அமம்ள் காய்கறி விற்பதில் கிடைக்கும்  சொற்ப பணத்தில் குடும்பத்தை நடத்தவே கஷ்டப்பட்டு வந்தார்.
தங்கமகன் மாரியப்பன்
தங்கமகன் மாரியப்பன்

ஆனால் மாரியப்பனின் ஏழ்மை நிலை கண்டு பலர் உதவி செய்தனர். உடன் படித்தவர்களும், ஆசிரியர்களும், ஊர் மக்களும் ரூ.100 முதல் ஆயிரம் வரை பணம் கொடுத்து உதவினார்கள்.
பிபிஏ முடித்துள்ள மாரியப்பன் கல்லூரி விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கும், சில சமயங்களில் தாயாருக்கு உதவியாக காய்கறி வியாபாரத்திற்கும் செல்வது வழக்கம்.
2012ஆம் ஆண்டிலிருந்து விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்கள், சான்றிதழ்களும் வாங்கி குவித்துள்ளார்.
ஏற்கனவே, இலங்கை மற்றும் நெதர்லாந்து நாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, பிரேசில் நாட்டில் ரியோ நகரில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
தமிழகம் உட்பட இந்தியாவே இன்று மாரியப்பனை மகிழ்ச்சியுடன், நெகிழ்ச்சியுடன் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. மத்திய – மாநில அரசுகள், பிரபல அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் என சகலரும் அவருக்கு வாழ்த்துக்களையும், ரொக்க பரிசுகளையும் வாரி வழங்கி வருகிறார்கள்.
இதற்கிடையில், மாரியப்பனின் சாதி குறித்து ஒருசிலர் விவாதிக்க தொடங்கி உள்ளனர். இதுகுறித்து மாரியப்பனின் தாயார் சரோஜா, எனது மகனை  அந்த சாதி இந்த சாதி என சாதி பற்றி கூறி மேலும் ஊனமாக்கி விடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் கூறுகையில், “எனக்கு நினைவு தெரிந்தது முதல் நான் சாதி பார்ப்பதில்லை. எனக்கு அது சுத்தமாக பிடிக்காது. “என் மகன் கால் பாதத்தை இழந்தபோது அவனுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் சாதி பார்த்தா மருத்துவம் பார்த்தார்? என் மகனோடு நட்பாக இருந்த மாணவர்கள் எவரும் சாதி பார்க்கவில்லை. அவ்வளவு ஏன்… என் குடும்ப பிழைப்பிற்காக நான் கீரை விற்றபோது என்னிடம் கீரை வாங்கியவர்கள் என்னை என்ன சாதி என கேட்டுவிட்டா வாங்கிச் சென்றார்கள்?
“என மகனின் வளர்ச்சியில் அனைத்து சாதியினருக்கும் பங்கு உண்டு. என் மகன் வெற்றி பெற்றபோது கைதட்டி வாழ்த்திய வெள்ளைக்காரர்கள் எந்த சாதியை பார்த்து என் மகனை பாராட்டினார்கள்? வாழ்த்தினார்கள்? என் மகனின் ஊனத்தைவிட அவனை சாதியாக பிரிப்பவர்களைத் தான் நான் ஊனமாக பார்க்கிறேன்.
“அப்படி பிரிப்பவர்களிடம் நான் மன்றாடி கேட்டுக் கொள்வதெல்லாம், இந்த நொடிவரை நான் மேல்சாதி கீழ்சாதி என்றெல்லாம் பார்த்ததே இல்லை. எல்லோரையும் உறவுகளாக, மனிதர்களாக பார்க்கிறேன்.
தயவுசெய்து என் மகனை அந்த சாதி இந்த சாதி என கூறி மனதை ஊனப்படுத்தி விடாதீர்கள்.
இனியாவது நாங்கள் நன்றாக பிழைத்துக் கொள்ளுகிறோம். தயவுசெய்து எங்கள் வாழ்க்கையில் சாதி விஷத்தை கலக்காதீர்கள்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.