2021-22 ஆம் ஆண்டில் சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்துள்ளதா என்றும், அப்படியானால், அதன் விவரங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
இன்று இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் சுதந்திரத்திற்குப் பிறகு பட்டியலின (எஸ்.சி.) மற்றும் பழங்குடியினர் (எஸ்.டி.) தவிர பிற சாதியினர் குறித்த மக்கள் தொகை கணக்கிடப்படவில்லை என்று தெரிவித்தார்.
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பட்டியலின மற்றும் பழங்குடியினர் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது.
சுதந்திரம் அடைந்ததில் இருந்து எஸ்.சி., எஸ்.டி., தவிர மற்ற ஜாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கவில்லை என்றார்.
மேலும், 2021 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் நோக்கம் குறித்து மத்திய அரசின் பல்வேறு துறையினருடன் கலந்தாலோசித்து 2019 ம் ஆண்டு மார்ச் மாதம் இதுகுறித்த விவரம் அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு கட்சிகள் சமீப ஆண்டுகளாக கோரிக்கை வைத்துவரும் நிலையில், மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் இவ்வாறு கூறியிருக்கிறார்.