சென்னை:

நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

தமிழகத்துக்கு தேவையான எந்தவொரு உதவியும் செய்யாமல்,  மாற்றாந்தாய் மனப்பான்மை யுடன் நடந்துகொள்ளும்  பிரதமர் மோடிக்கு எதிராக மதிமுக சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட் டம் நடை பெற்று வருகிறது. மோடி ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நாளை தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வரும் மோடிக்கு கருப்பு கொடி காட்டப்பட மாட்டாது என்று வைகோ அறிவித்து உள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 2016ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி சென்னையில் எழும்பூரில் நடைபெற்ற ரயில்மறியல் போராட்டம் தொடர்பான வழக்கில், எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றதில் வைகோ நேரில் ஆஜரானார். அதைத் தொடர்ந்து, வழக்கு  25ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த வைகோ, செய்தியாளர்களிடம் கூறியதாவது,  நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படாது என ஏற்கெனவே அறிவித்து விட்டதாக தெரிவித்தார்.

ஆனால்,  அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வந்தால் கருப்புக் கொடி போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.