சென்னை: வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு குறித்த தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை இல்லை சென்னை உயர்நீதிமன்றம் கூறிய நிலையில் வழக்கை ஆகஸ்டு 2வது வாரத்திற்கு ஒத்தி வைத்தது.
தமிழகத்தில், கல்வி, வேலை வாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. அதற்கான அரசாணை தற்போதைய திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதையடுத்து, மனுதாரர் வேண்டுகோளை ஏற்று இன்று நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசாணை குறித்து, தமிழகஅரசு உடனே பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கை ஒத்தி வைத்து. அதன்படி, இன்று மாலை மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து தமிழகஅரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் சண்முகசுந்திரம் , வன்னியர் உள்ஒதுக்கீடு காரணமாக யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை எனவும் ஏப்ரல் மாதமே அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் வன்னியர் உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது என்றும் எனவே வன்னியர் உள் ஒதுக்கீட்டிற்கு எதிரான அரசாணைகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதாடினார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணைக்கு உடனடியாக தடை விதிக்க முடியாது என்று கூறிய நிலையில், வழக்கை ஆகஸ்ட் 2ம் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.