டெல்லி:

அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மிசோராம், மேகாலயா ஆகிய 3 மாநிலங்களில் மாட்டு இறைச்சி கூடங்களுக்கு தடை விதிக்க மாட்டோம் என பாஜ அறிவித்துள்ளது.
உ.பி. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் தைரியமாக மாட்டு இறைச்சிக்கு எதிராக குரல் கொடுக்கும் பாஜக ஓட்டுக்காக இந்த 3 மாநிலங்களுக்கு தனது கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது உ.பி.யில் பாஜ ஆட்சி அமைந்தவுடன், அங்குள்ள சட்டவிரோத மாட்டு இறைச்சி கூடங்களை மூட முதல்வர் ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார். இதனால் உ.பி.மாநிலத்தில் மாட்டு இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, இத்தொழில் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு நாகலாந்து, மேகாலயா, மிசோராம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்த மாநிலங்களில் கிறிஸ்தவ மக்கள் அதிகம். உ.பி.யை போல் இங்கு மாட்டு இறைச்சி கூடங்களை மூடுவோம் என்று தேர்தலுகு முன்பே பாஜ அறிவிக்க தயக்கம் காட்டி வருகிறது. இங்கு கிறிஸ்தவர்கள் அதிகம் மாட்டு இறைச்சி சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள்.

அதனால் தேர்தலில் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்பதால், இப்போதே பாஜ வரிந்துகட்டிக் கொண்டு பாஜ ஆட்சிக்கு வந்தால் மாட்டு இறைச்சி கூடஙகளுக்கும் கட்டுப்பாடு விதிக்க மாட்டோம், மூட மாட்டோம் என்று வெளிப்படையாகவே அறிவித்து வருகின்றனர்.

நாகாலாந்து பாஜ தலைவர் விசாசோலி லகோங்கு கூறுகையில், ‘‘உபி.யில் இறைச்சி கூடங்களுக்கு தடை விதிப்பது போல் நாகாலாந்தில் பாஜ ஆட்சிக்கு வந்தால் தடை விதிக்கமாட்டோம். இங்குள்ள சூழ்நிலை வேறு என்பதை பாஜ மேலிடம் அறியும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், மேகாலயா பாஜ பொதுச் செயலாளர்டேவிட் கட்சாதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிலர் வேண்டுமென்றே பாஜ ஆட்சிக்கு வந்தால் மாட்டு இறைச்சி கூடங்களுக்கு தடை விதிக்கும் என்று வதந்திகளை பரப்பி வருகின்றனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேகாலயா பாஜ தலைவர் சிபுன் லிங்டோ கூறுகையில், ‘‘உ.பி.யில் உரிய உரிமம் இல்லாமல் செயல்பட்ட மாட்டு இறைச்சி கூடங்கள் மட்டுமே பூட்டப்பட்டுள்ளது. அங்கு மாட்டு இறைச்சி கூடங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. விலங்குகளை கொல்வது மற்றும் இறைச்சி விற்பனை செய்வது சட்டப்பூர்வமாகவும், தரமான முறையிலும் நடக்க வேண்டும் என்று தான் அரசு விரும்புகிறது.

பாஜ.வின் வளர்ச்சி திட்ட கொள்கைகளால் நாங்கள் அக்கட்சியில் உள்ளோம். கட்சியின் நிலை மேம்பட்டு வருவதால் அதிகப்படியான மக்கள் இதில் இணைந்து வருகின்றனர். இது அடுத்த ஆண்டு வெற்றிக்கு பிரகாசமாக இருக்கும்’’ என்றார்.

மிசோராம் பாஜ தலைவர் ஹிலுனா கூறுகையில், ‘‘மிசோராமில் மாட்டு இறைச்சி கூடங்களுக்கு தடை விதிக்க மாட்டோம். கிறிஸ்தவர் சமுதாய மக்கள் அதிகம் இருக்கும் மிசோராம் உள்ளிட்ட இதர மாநிலங்களில் மாட்டு இறைச்சி கூடங்களுக்கு தடை வராது’’ என்றார்.

மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுகையில், ‘‘உ.பி.யில் சட்டவிரோதமாக செயல்பட்ட மாட்டு இறைச்சி கூடங்கள் தான் மூடப்படுகிறது. இதில் மாற்று கருத்து எழ வாய்ப்பே இல்லை. சட்டவிரோத மாட்டு இறைச்சி கூடங்கள் மீது தான் முதல்வர் ஆதித்யாநாத் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

சுகாதார அமைச்சர் சித்தார்த நாத் சிங் கூறுகையில், ‘‘உ.பி, அரசும் இதை தெளிவுபடுத்தியுள்ளது. சட்டவிரோதமாக செயல்படுவோர் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உரிமம் பெற்ற மாட்டு இறைச்சி கூடங்கள் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வலியுறுத்தப்படுகிறது. உரிமம் பெற்றவர்கள் அஞ்சத் தேவையில்லை.

கோழி இறைச்சி, மீன், முட்டை விற்பனை செய்யும் கடைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கு உத்தரவிடவில்லை. அதனால் பயம் தேவையில்லை. என்றார். அதிகாரிகள் தங்களது வரம்பை மீறி செயல்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பசுமை தீர்ப்பாயம் சட்டவிரோத மாட்டு இறைச்சி கூடங்களை மூட உத்தரவிட்டுள்ளது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘சட்டவிரோத மாட்டு இறைச்சி கூடங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது என்று 2015ம் ஆண்டு பசுமை தீர்ப்பாயம் தெரிவித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் சட்டவிரோத மாட்டு இறைச்சி கூடங்கள், சமூக விரோதிகள் மீது கடந்த ஆட்சியாளர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்று சித்தார்த நாத் தெரிவித்தார்.