சென்னை: சீனாவில் தற்போதுகூட கொரோனா அதிகரித்து வந்தாலும் தமிழகத்தில் ஒமிக்ரான் போன்ற பாதிப்பு எதுவும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
உலக நாடுகளை மிரட்டி வந்த கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கொரோனா தொற்றை உலக நாடுகளுக்கு பரப்பிய சீனாவில் இன்றளவும் தொடர்ந்து வருகிறது. இதனால் சில இடங்களில் கடும் கட்டுபாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், மீண்டும் சோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளது. இந்தியாவில் தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 112 ஆக பதிவாகியுள்ளது. தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,490 ஆகவும் உள்ளது. அதே வேளையில், நாடு முழுவதும் இதுவரை 2,20,00,92,109டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று FORTIS மருத்துவமனையில் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இருதய valve மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தேபோது, சீனாவில் தற்போதுகூட கொரோனா அதிகரித்து வந்தாலும் தமிழகத்தில் ஒமிக்ரான் போன்ற பாதிப்பு எதுவும் இல்லை என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். அப்போது, மருத்துவத்தில் தமிழ்நாடு முன்னோடியாக இருக்கிறது என ஒன்றிய அரசு விருது அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. முதல் தவணை தடுப்பூசி 96 சதவீதம் பேர், இரண்டாம் தவணை 92 சதவீதம் பேர் செலுத்தியதன் மூலம் 90 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. கொரோனா, ஒமிக்ரான் தொற்று குறைந்துள்ளதற்கு அரசு மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவமனை பங்களிப்பும் இன்றியமையாதது. தமிழக முதல்வராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு பின் ஒன்றிய அரசின் சார்பில் மருத்துவ துறைக்கு ஏராளமான விருதுகள் தொடர்ந்து கிடைக்கப்பெற்று வருகின்றன.
கடந்த ஓராண்டில் மட்டும் 10க்கும் மேற்பட்ட விருதுகளை தமிழக அரசு பெற்றிருக்கிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டமும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் இன்னுயிர் காப்போம், நம்மை காப்போம் 48 என்ற மகத்தான திட்டமும் இந்திய அளவில் பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றிருக்கிறது என குறிப்பிட்டார்.